வணிகம்

சுகாதாரமின்றி வைக்கப்பட்ட பீட்சா மாவு: வைரலான படங்கள் | டோமினோஸ் கொடுத்த விளக்கம்

Ellusamy Karthik

சுகாதாரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்ட பீட்சா மாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தப் படம் பெங்களூரு நகரில் உள்ள டோமினோஸ் பீட்சாவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை கண்டு நெட்டிசன்களும் கொதித்தெழுந்து கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில், டோமினோஸ் அது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.

‘பீட்சா’ இத்தாலி நாட்டின் உணவு வகையை சேர்ந்தது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்று. சுவையான ஒரு ஸ்லைஸ் இத்தாலியன் பீட்சா வேண்டுமா என்றால், வேண்டாம் என சொல்பவர்கள் மிகவும் சிலரே. அந்த அளவிற்கு இதன் ருசி பலரையும் கவர்ந்துள்ளது.

அதன் காரணமாக பலரும் பீட்சா பிரியர்களாக உள்ளனர். அதன் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் போன் செய்தால் வீட்டுக்கே வந்து பீட்சாவை டோர் டெலிவரி செய்துவிடுவார்கள். இந்த வழக்கம் ஸ்விகி, ஜொமேட்டோ கால கட்டத்துக்கு முன்னிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மக்கள் மத்தியில் பீட்சாவுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த சூழலில்தான் டோமினோஸ் பீட்சா விவகாரம் சுகாதாரமற்ற உணவு சீர்கேடு சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

என்ன நடந்தது? - துஷார் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ஆர்டர் வந்தால் பீட்சா தயார் செய்து கொடுக்க முன்கூட்டிய தயாரிக்கப்பட்டுள்ள பீட்சா மாவு தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் துடைப்பம், மாப், டாய்லெட் கிளீனர் மற்றும் துணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

“மக்களே உஷார். பெங்களூரு நகரில் உள்ள டோமினோஸ் பீட்சா அவுட்லெட் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள பீட்சா மாவுக்கு மேலே துடைப்பம், மாப், துணிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். அதனால் கூடுமான வரையில் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவை உண்ணுங்கள்” என தெரிவித்துள்ளார் துஷார்.

இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளனர்.

டோமினோஸ் விளக்கம்: “பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் நாங்கள் பீட்சா தயாரித்து வருகிறோம். சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் சீரிய முறையில் பின்பற்றி வருகிறோம். இது மீறப்பட்டுள்ளதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கவனத்திற்கு வந்துள்ள இந்த விவகாரம் குறித்து விரிவாக விசாரித்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறோம். நாங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வருகிறோம்” என தனது அறிக்கையில் டோமினோஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT