வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் 14.5% அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கிகள் வழங்கிய கடன் கடந்த ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி 14.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன் ரூ.123.69 லட்சம் கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டு ஜூலையில் காணப்பட்ட ரூ.108.00 லட்சம் கோடி கடனுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதம் அதிகமாகும். இதைத் தவிர, வங்கிகள் திரட்டிய டெபாசிட் ரூ.155.49 லட்சம் கோடியிலிருந்து ரூ.169.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது, 9.1 சதவீத வளர்ச்சியாகும்.

வங்கிகள் கடன் வழங்கல் குறித்த இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காததால் இது தற்காலிகமான மதிப்பீடாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (0.5%) அதிகரித்து பேரிடருக்கு முன்பு இருந்ததை விடஅதிகமாக 5.40 சதவீதம் என்ற அளவில் நிர்ணயிக்க ஏகமனதாக முடிவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT