புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) நிகர லாபம் 196 சதவீதம் அதிகரித்து ரூ.246 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் அதன்லாபம் ரூ.82.5 கோடியாக இருந்தது.
மொத்த வருவாய் ரூ.877 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.258 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் உணவு விற்பனை மூலம் ரூ.352 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் அது ரூ.56.7 கோடியாக இருந்தது. டிக்கெட் புக்கிங் மூலம் ரூ.301.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ரயில் நீர் மூலம் ரூ.83.6 கோடியும் சுற்றுலா மூலம் ரூ.82 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் கரோனா ஊரடங்கால் ரயில் சேவை குறைக்கப்பட்டிருந்தது. உணவு சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வருவாய் குறைந்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரயிலில் உணவு விநியோகம் படிப்படியாகத் தொடங்கப்பட்டது. அதையடுத்து தற்போது ஐஆர்சிடிசியின் லாபம் அதிகரித்துள்ளது.