வணிகம்

விரைவில் ரூ.2000 நோட்டு புழக்கத்துக்கு வர வாய்ப்பு

செய்திப்பிரிவு

ரூ.2000 நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ரூ.10, 20, 50, 100, 500, 1000 மதிப்பிலான நோட்டுகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விரைவில் ரூ.2000 நோட்டு புழக்கத்துக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2000 மதிப்பிலான நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் மைசூருவில் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இதை மக்கள் மத்தியில் புழக்கத்தில்விட ரிசர்வ் வங்கி ஆயத்தப்பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருப்புப் பண பதுக்கலை கட்டுப்படுத்த ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்படுவதை தடுக்க வேண்டும் என ஒருசில தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் ரூ.2000 மதிப்பிலான நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு தயாராகியிருக்கிறது. இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இதுவரை ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட அதிக மதிப்பிலான நோட்டு ரூ.10,000 ஆகும். 1938 மற்றும் 1954-ம் ஆண்டுகளில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், அவை முறையே 1946-, 1954 ஆண்டுகளில் செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்டன.

அதன்பிறகு இப்போதுதான் அதிகபட்ச மதிப்பாக ரூ.2,000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடித்திருக்கிறது. இருப்பினும் இது தொடர்பாக அரசு தரப்பிலோ, ரிசர்வ் வங்கித் தரப்பிலோ எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT