வணிகம்

நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? - ஒரு பார்வை

செய்திப்பிரிவு

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பயனாளிகளிடையே அச்சத்தை உருவாக்கியது. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் நியாயமானதா? இந்த நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டுள்ளோம்?

நிலத்தடி நீரின் நன்மைகள் மிகப் பெரிதாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியான சுரண்டல் பல எதிர்மறையான விளைவுகளை, விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தவறான மின்சார கட்டணக் கொள்கை: பசுமைப் புரட்சிக்குப் பிறகு நிலத்தடி நீர்ச் சுரண்டல் அதிகரித்து வருகின்றபோதிலும், பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றிவரும் தவறான மின் கட்டணக் கொள்கைகளே நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுவதற்கு முக்கியக் காரணம். குறைந்த விலை, இலவச மின்சாரம் போன்றவை பயனாளர்களை (விவசாயிகளை மட்டுமல்ல) அதிக நிலத்தடி நீரைச் சுரண்ட ஊக்குவிக்கிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் இலவச மின்சாரம், குறிப்பாக ஆழம் குறைந்த குழாய்க் கிணறுகளைக் கொண்ட விவசாயிகளுக்கு நன்மையைவிட அதிகத் தீங்கையே விளைவிக்கிறது. ஆழ்துளைக் கிணறுகள் அதிக நிலத்தடி நீரைச் சுரண்டுவதால், ஆழமற்ற கிணறுகளில் தண்ணீர் குறைந்து, பின்னர் அவை பயனற்றுப்போய்விடுகின்றன. நீர்மட்டம் குறைவதால் கிணறுகளின் ஆயுள்காலமும் குறைகிறது.

இது பெரிய குதிரைத்திறன் பம்புசெட்களைக் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை நிறுவ முடியாத, வளம் குறைந்த விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 5-வது (2017) சிறு - குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பின்படி, 2006-07 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் மொத்தம் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் செயலிழந்துள்ளன.

கட்டணம் மட்டும் போதாது: அதிகரித்துவரும் நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கருத்தில்கொண்டு, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குப் பதிவுக் கட்டணம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கட்டுப்படுத்த இது போதுமா? பெயரளவிலான இந்தக் கட்டணம் நிலத்தடி நீரைப் பெருமளவில் பயன்படுத்துவோர் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அனைத்துப் பயனாளிகளுக்கும் ஒரே மாதிரி கட்டணத்துக்குப் பதிலாக, விவசாயம், தொழில்துறை - வீட்டு உபயோகம் போன்றவற்றுக்கு, அவர்களின் கட்டணம் செலுத்தும் திறனைக் கருத்தில்கொண்டு மாறுபட்ட கட்டண வீதத்தை நிர்ணயிக்கலாம்.

விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு, நீர்ச் சுரண்டலின் அளவு, கிணற்றின் ஆழம், பம்புசெட்டின் குதிரைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கலாம். விவசாயத்துக்கான கட்டணத்தை, நில அளவு, பம்புசெட்டின் குதிரைத்திறன் / மின் நுகர்வு அடிப்படையில் நிர்ணயிக்கலாம்.

எவ்வாறாயினும், நிலத்தடி நீரின் அதிகப்படியான சுரண்டலைக் கட்டுப்படுத்தக் கட்டண நிர்ணயிப்பு மட்டும் போதுமானதாக இருக்காது. பாசன பம்புசெட்டுகளுக்கு மின்சாரத்தை இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுகிறது. எனவே, மின் கட்டணக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து குதிரைத்திறனுக்குக் குறைவான பம்புசெட் வைத்திருக்கும் குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படலாம். மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் மின்சார உபயோகத்தின் அடிப்படையில் (kWh based pricing) விலையை நிர்ணயிக்க வேண்டும்.

இதன் மூலம், அதிக நீரைப் பயன்படுத்தும் பயிர்களைச் சாகுபடி செய்பவர்கள் நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டுவதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

> இது, மூத்த பேராசிரியர் அ.நாராயணமூர்த்தி எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT