லார்சன் அண்ட் டியூப்ரோ ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் கைமாறியதில் நடைபெற்ற உள்பேர வழக்கு குறித்து 70 நிறுவனங்களிடம் விசாரிக்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) மற்றும் பிற நிறுவனங்களும் இந்த விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எல் அண்ட் டி ஃபைனான்ஸ் பங்கு வர்த்தகத்தில் உள்பேர வணிகம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை இரவு செபி அமைப்பு கேமன் ஐலண்டிலிருந்து மேற்கொள் ளப்பட்ட ஹெட்ஜ் நிதியத்தை ரத்து செய்தது. அத்துடன் ஃபேக்டோரியல் மாஸ்டர் ஃபண்ட் முதலீட்டையும் ரத்து செய்தது. இவ்விரு நிதியும் ஹாங் காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேக்டோரியல் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலம் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.
இவை பி-நோட் அடிப் படையில் ஐந்து வெவ்வேறு அந்நிய நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டன. இத்தகைய முதலீடுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமான வகையில் மேற்கொள் ளப்பட்டது தெரிய வந்துள்ளது. இத்தகைய முதலீடுகளை மேற்கொண்ட அந்நிய நிறுவனங்கள் விவரம் வருமாறு: மெக்காரி வங்கி, ஷாக்ஸ் சிங்கப்பூர், மெரில் லிஞ்ச் சிஎம் எஸ்பனா, நொமுரா சிங்கப்பூர் மற்றும் சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் மொரீஷியஸ் லிமிடெட் ஆகியனவாகும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வர்த்தகத்தில் ஃபேக்டோரல் நிறுவனம் முதலீட்டு நிறுவனமாக இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் முதலீ டுகளை கிரெடிட் சூயுஸ் நிறுவனம் மேற்கொண்டு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஓஎப்சி பங்குகளை விற்பனை செய்யும் தரகு நிறுவனமாக இருந்துள்ளது.
இது தொடர்பாக செபி விசாரணை நடத்தியதில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையை முன்கூட்டியே யாரோ தெரிவித்தது தெரியவந்தது. கடந்த மார்ச் 13, 2014-ல் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவன பங்கு எப் அண்ட் ஓ பிரிவில் சேர்க்கப்பட்டது. இதில் முன்பேர வணிக மதிப்பு 10 சதவீத அளவுக்குச் சரிந்தது.
ஒரு பங்கு விலை ரூ. 86-க்கு தொடங்கி ரூ. 88-ஆக உயர்ந்தது. பின்னர் 10 சதவீதம் சரிந்து ரூ. 79.20-க்கு வர்த்தகமானது. இது குறித்து விரிவான விசாரணையை செபி மேற்கொண்டுள்ளது.