வணிகம்

25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது பங்குச் சந்தை

செய்திப்பிரிவு

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 213 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25019 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 72 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7474 புள்ளிகளானது.

இதற்கு முன்பு ஜூன் 3-ம் தேதி தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 7446 புள்ளிகளாக உயர்ந்திருந்தது. இப்போது அதையும் கடந்து உச்சபட்சத்தை தொட்டுள்ளது.

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக இருந்ததால் 11 துறைகளின் பங்கு விலைகள் 0.17 சதவீதம் முதல் 3.33 சதவீதம் வரை உயர்ந்தன.

உலோகம், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், எப்எம்சிஜி, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவது அதிகரித்தது. புதன்கிழமை மொத்தம் ரூ. 192 கோடி மதிப்புக்கு பங்குகளில் எப்ஐஐ முதலீடு செய்திருந்தன.

டாடா மோட்டார்ஸ், சீசா ஸ்டெர்லைட், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டிசிஎஸ்., ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, டாடா பவர், விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், கெயில் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகள் குறிப்பிடத்தக்க லாபமீட்டின.

மத்திய பட்ஜெட்டுக்குமுன்பாக பங்குச் சந்தை குறியீட்டெண் 30 ஆயிரம் புள்ளிகளைத் தொடும் என நம்புவதாக மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் தலைவர் மோதிலால் ஆஸ்வால் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்து கேட்கும் பணியைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக வேளாண் துறையைச் சேர்ந்தவர்களுடன் அவர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சமூகத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துளையும் கேட்டறிந்தார். மத்திய பட்ஜெட் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப் பட உள்ளது.

பங்குச் சந்தையில் மொத்தம் 2,153 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. 869 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகம் ரூ. 4,906 கோடியாகும்.

SCROLL FOR NEXT