வணிகம்

மறுபிறவி எடுக்கும் RX100 பைக்? - யமஹாவின் பலே திட்டம்

செய்திப்பிரிவு

புது டெல்லி: யமஹா RX100 பைக் இந்திய சாலைகளில் மீண்டும் றெக்கை கட்டி பறக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது அந்த பைக் பிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இதற்கு எப்படியும் நான்கு ஆண்டு காலம் எடுக்கும் எனத் தெரிகிறது.

யமஹா மோட்டார் இந்தியா தலைவர் இஷின் சிஹானா இந்தத் திட்டத்தை ‘பிசினஸ் லைன்’ பேட்டியில் உறுதி செய்துள்ளார். ஆனால், இதனை சந்தையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1985 முதல் 1996 வரையில் 2 ஸ்ட்ரோக் எஞ்சினை கொண்ட RX100 மோட்டார் சைக்கிளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. 1990 முதல் இந்தியாவிலேயே இந்த பைக்கை தயாரிக்க தொடங்கியது யமஹா. அதற்கு முன்னர் ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. அதன்பின்னர் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட R சீரிஸ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது யமஹா.

இருப்பினும் RX100 பைக் மீது மக்கள் கொண்டிருக்கும் மோகம் இதுவரையில் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு காரணம் அதன் பிரத்யேக சத்தம். இந்திய சாலைகளில் இப்போதும் சீறிப்பாயும் RX100 பைக்கிற்கு தனி ரசிகர் கூட்டம் இருப்பதுண்டு. அதன் சத்தத்தை கேட்டதும் அந்த பைக்கின் பக்கம் பெரும்பாலான கண்கள் ஒரு நொடி திரும்பி பார்க்கும். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரிடத்திலும் இதற்கு தனி மவுசு உண்டு.

அவ்வப்போது இந்த பைக் எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதன் பிரியர்கள் மத்தியில் எகிறுவது உண்டு. இப்போது அவர்களது நெஞ்சத்தை குளிர செய்யும் வகையில் அமைந்துள்ளது யமஹா நிறுவனத்தின் திட்டம்.

கிளாசிக் ரக வாகனங்கள் மீண்டும் புதிய வடிவில் கம்பேக் கொடுத்து வருகின்றன. அதற்கு சிறந்தவொரு உதாரணம் ஜாவா, பஜாஜ் சட்டாக் போன்ற வாகனங்கள். அந்த வகையில் வெகு விரைவில் யமஹா RX100 இணையும் என தெரிகிறது.

இருந்தாலும் அதன் ஒலி, செயல்திறன் போன்றவை இந்த புதிய வடிவத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இப்போது இந்தியாவில் அமலில் உள்ள BSES தரநிலை காரணமாக புதிய RX100 மாடலில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக அதன் எஞ்சின் நிச்சயம் மாற்றப்படும் என தெரிகிறது. வரும் 2026 வாக்கில் RX100 மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எலெக்ட்ரிக் வடிவிலா அல்லது பெட்ரோல் போன்ற எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

SCROLL FOR NEXT