புதுடெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.02 ஆக சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80-க்கு கீழ் வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை ஆகும். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு அதிகரிக்கும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வு ஆகிய 2 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி (வர்த்தக பற்றாக்குறை) அதிகரித்து இருப்பது இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 172 சதவீதம் உயர்ந்து 26.1 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி மிக அதிகமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உணவுப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் உலக அளவில் பணவீக்கம் அதிகரித்தது. அமெரிக்கா தன் நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.