வணிகம்

சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டி உயர்வை ரத்து செய்ய கோரிக்கை

செய்திப்பிரிவு

சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் வேணுகோபால், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2,600 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 100 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி உயர்வு ஜூலை 18-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

ஏற்கெனவே, இந்நிறுவனங்களுக்கு அரசு ஒரு இலக்கு நிர்ணயித்து, அதில் ரூ.28 லட்சம் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்கள் வரி எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், ரூ. 80 லட்சம் வரை பாதி வரியும், அதற்கு மேல் முழுமையான வரியும் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வரி விதிப்பு உயர்ந்துள்ளது.

மேலும், இந்த சிட்பண்ட் நிறுவனங்கள் வங்கிகளைப் போல செயல்பட வேண்டுமென்றால் ரூ.100 கோடி முதலீடு தேவை. ஆனால், அந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியாது. பெரும்பாலான நிறுவனங்கள் ரூ.3 கோடிக்கு அதிகமான சீட்டுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பிடித்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஆனால், இப்போது இந்த ஜிஎஸ்டி உயர்வால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்படும் என்றார்.

SCROLL FOR NEXT