சென்னை: பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனம் இருசக்கர மின் வாகன தயாரிப்புக்காக கிருஷ்ணகிரியில் ரூ.250 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
40 ஆயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவில் ஆண்டுக்கு 1 லட்சம் இருசக்கர மின் வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. மின் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளும் மோட்டார்களும் இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. 2023 முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்த ஆலை மூலம் 3000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இருசக்கர மின் வாகனத்தின் விலை ரூ.85,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் இருக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சொரூப் குமார் பாரதி தெரிவித்தார்.
பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனம் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் சோலர், மின் வாகனம் என மாற்று எரிசக்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது.
ஏற்கெனவே கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் அதன் மின் வாகன தயாரிப்பு ஆலையை அமைத்துள்ளது. இந்நிலையில், பாரத் ஆல்ட் ப்யூல் நிறுவனமும் கிருஷ்ணகிரியைத் தேர்ந்தெடுத்துள்ளதால் தமிழகத்தின் மின் வாகன தயாரிப்பு கேந்திரமாக கிருஷ்ணகிரி உருவெடுக்கிறது.