புது டெல்லி: ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாசா ஏர் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) உரிமத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் விமான சேவையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஆகாசா ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் வாக்கில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் 'ஆகாசா ஏர்' நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற கண்ணோட்டத்தில் ஆகாசா தொடங்கப்பட்டது.
மிகவும் குறைந்த கட்டணத்தில் வரும் 2023, மார்ச் மாதத்திற்குள் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தங்களது முதல் விமானத்தை அடுத்து வரும் நாட்களில் (ஜூலை மாதத்திற்குள்) இயக்கம் என தெரிகிறது. கடந்த மே மாத வாக்கில் முதல் விமானத்தில் படத்தை பகிர்ந்திருந்தது ஆகாசா.
2022-23 ஆண்டில் மொத்தம் 18 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. படிப்படியாக வருடத்திற்கு 12 முதல் 14 வரை என ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. QP என்ற ஏர்லைன் கோட் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.