முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி, பெலேனோ மற்றும் டிசையர் ரக கார்களை திரும்ப பெறுகிறது. மேம்படுத்தப்பட்ட ஏர்பேக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் தவறான எரிபொருள் பில்டரை மாற்றியமைக்கவும் 77,380 கார்களை திரும்ப பெற உள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2015, ஆகஸ்ட் 3 முதல் 2016, மே 17 வரை இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட 75,419 பெலேனோ கார்கள் திரும்ப பெறப்படுகின்றன. இதில் 17,231 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2015 ஆகஸ்ட் 3, முதல் 2016 மார்ச் 22, வரை இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட 15,995 பெலேனோ டீசல் கார்களில் தவறான எரிபொருள் பில்டர் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதை மாற்றித்தரவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளது.
மேலும் டிசையர் டீசல் ஹேட்ச்பேக் மாடலில் 1,961 கார்களையும் மாருதி திரும்ப பெறுகிறது. டீலர்கள் மே 31-ம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து வாகனங்களை வாங்கத் தொடங்குவார்கள் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவனம், ஜப்பானின் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.