சென்னை: ‘முன்னெப்போதைவிடவும் தணிக்கைத் துறை தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இது. சுற்றுச்சூழல் சார்ந்து துல்லியமான தகவல்களை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு தணிக்கையாளர்களுக்கு இருக்கிறது’ என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பார்த்தா பிரதீம் சென்குப்தா தெரிவித்தார்.
தணிக்கைத் துறையில் உருவாகிவரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரு நாள் தேசிய மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டை இந்திய உள்தணிக்கையாளர்கள் அமைப்பின் (Institute of Internal Auditors India - IIA) மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தக்கூடிய சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகக் காரணிகள் (இஎஸ்ஜி) குறித்தும் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்தியாவின் முன்னணி தணிக்கை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் இந்த மாநாட்டில் விவாதித்தனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பார்த்தா பிரதீம் சென்குப்தா இந்நிகழ்வில் பேசியதாவது: ‘நான் வங்கித் துறையைச் சேர்ந்தவன். வங்கித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு எம்எஸ்எம்இ, ரியல் எஸ்டேட், வேளாண் துறை என பலதரப்பட்ட துறைகள் குறித்து குறைந்தபட்சமாக வேணும் அறிதல் இருப்பதுண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில் தணிக்கைத் துறையின் முக்கியத்துவத்தை நான் தீவிரமாக உணர்கிறேன்.
இன்று உலகின் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக மாறி இருக்கிறது. ஒரு நாட்டில் நடக்கும் போர் அந்நாட்டை மட்டும் பாதிப்பதில்லை. உலகையே பாதிக்கிறது. அதேபோலத்தான் ஒரு நாட்டின் பொருளாதாரமும் அங்கு செயல்படும் நிறுவனங்களோடு பிணைந்து இருக்கிறது. எனவே நிறுவனங்கள் சரிவதைத் தடுப்பது அவசியம். நிறுவனத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதில் தணிக்கையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப தற்போது தணிக்கைத் துறையும் புதிய பரிணாமத்துக்குள் நுழைந்திருக்கிறது. முன்பு தணிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தின் நிதி விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தினர். ஆனால், இப்போது ஒரு நிறுவனம் தொடர்புடைய சுற்றுச்சூழல் பாதிப்பு, சமூக பாதிப்பு என எல்லாவற்றிலும் தணிக்கையாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி முறைகளும் மாறி இருக்கிறது. டிஜிட்டல் மோசடி அதிகரித்து இருக்கிறது. இவற்றைத் தடுப்பது சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை ஆரம்ப நிலையிலே கண்டறியும் பொறுப்பு தணிக்கையாளர்களுக்கு இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார்.