புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் ‘தொழில் முனைவு இந்தியா’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளர்ச்சிக்காக ‘எம்எஸ்எம்இ துறையின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்தல்’, ‘எம்எஸ்எம்இ துறையில் முதல் முறையாக ஏற்றுமதியில் ஈடுபடுபவர்களை மேம்படுத்துதல்’ என்ற இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் ‘எம்எஸ்எம்இ துறையின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்தல்’ திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.6,000 கோடி செலவிடப்பட உள்ளது. இந்தத் திட்டம் உலக வங்கியுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: நம் நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு எம்எஸ்எம்இ துறை மூலம் கிடைக்கிறது. அந்த வகையில் எம்எஸ்எம்இ துறையை மேம்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தை மேம்படுத்துவதாகும்.
சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்) திட்டத்துக்கு எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. இத்துறையை வலுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 8 ஆண்டுகளில் 650 சதவீதம் அதிகரித்துள்ளது. எம்எஸ்எம்இ துறையுடன் 11 கோடி மக்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இத்துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
எம்எஸ்எம்இ தொழில்களுக்கு கடன் வழங்குதல் கடந்த 8 ஆண்டுகளில் எளிமையாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அரசுக்கு வழங்குவதற்கு அரசு இ-சந்தை சிறந்த தளமாக உள்ளது.
முதன் முதலாக காதி மற்றும் கிராமப்புற தொழில்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறு தொழில்முனைவோர் மற்றும் சகோதரிகளின் கடின உழைப்பினாலேயே இது சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்புகளை மோடி வெளியிட்டார். அவர் அத்திட்டத்தின் கீழ், 18 ஆயிரம் பயனாளர்களுக்கு ரூ.550 கோடி பரிவர்த்தனை செய்தார்.