நிதின் குப்தா 
வணிகம்

மத்திய நேரடி வரி வாரிய தலைவராக நிதின் குப்தா நியமனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவராக நிதின் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். 1986-ம் ஆண்டின் இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியான இவர் தற்போது வாரியத்தின் விசாரணை பிரிவு உறுப்பினராக உள்ளார். இவர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.

மத்திய பணியாளர் நியமனத்துக்கான அமைச்சரவை குழு இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் பதவி வகித்த ஜேபி மொகபாத்ரா கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இப்பதவியை கூடுதல் பொறுப்பாக வாரிய உறுப்பினரும் 1986-ம் ஆண்டு பிரிவின் ஐஆர்எஸ் அதிகாரியுமான சங்கீதா சிங் கவனித்து வந்தார்.

சிபிடிடி குழுவானது தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் அடங்கிய குழுவைக் கொண்டது. இவர்கள் அனைவரும் சிறப்பு செயலர் அந்தஸ்துக்கு நிகரானவர்கள். இக்குழுதான் வருமான வரித்துறை நிர்வாக செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. தற்போது இக்குழுவில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 1985-ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரிகளாவர். இவர்களில் அனுஜா சாரங்கி மூத்த உறுப்பினராவார்.

இவருடன் பிரக்யா சஹாய்சக்ஸேனா, சுபஸ்ரீ அனந்த் கிருஷ்ணன் ஆகியோர் 1987-ம் வருடத்தைய ஐஆர்எஸ் அதிகாரிகளாவர்.

SCROLL FOR NEXT