வணிகம்

பின்டெக் நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கலாம்: பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் கடன் வழங்கல் இலக்கை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், கடன் வழங்கலை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு ஃபின்டெக் நிறுவனங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய லாம் என்று பொதுத் துறைவங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஃபின்டெக் நிறுவனங்கள் வலுவான தொழில்நுட்பக் கட்ட மைப்பைக் கொண்டு மக்களை எளிதில் சென்றடைகின்றன. இதன்மூலம் வர்த்தகம் அதிகரிக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனங் களுடன் கூட்டணி வைத்தால், பொதுத்துறை வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிக்கும் என்றும் அதன்மூலம் வங்கிகளின் வர்த்தகத்தை அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

7.8 சதவீத கடன்: சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கல் நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு மார்ச்சில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கல் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு மார்ச்சில் அது 3.6 சதவீதமாக இருந்தது. சில வங்கிகளின் கடன் வழங்கல் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடன் வழங்கலை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் வங்கிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் உற்பத்தித் துறைகளுக்கு கடன் வழங்கலை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பகுத்தாய்வு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மோசடிகளை கண்டுபிடிக்கும் வகையில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

SCROLL FOR NEXT