வணிகம்

கிங்பிஷர் பிராண்ட் ஏலம்: வங்கிகளின் முயற்சி மீண்டும் தோல்வி

பிடிஐ

கிங்பிஷர் பிராண்டுகளை ஏலம் விடும் வங்கிகளின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த பிராண்டை ஏலம் எடுக்க எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பிராண்ட் மற்றும் அந்நிறுவனம் வங்கிகளில் கடனுக்கு ஈடாக வைத்துள்ள சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் ரூ. 366.70 கோடியை மீட்க வங்கிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக நேற்று நடத்தப்பட்ட ஏலத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவற்றை வாங்க ஏலம் கேட்கவில்லை. இதனால் ஏல நடைமுறை தோல்வியில் முடிந்தது.

இதற்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவல கத்தை ஏலம் விட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அதுவும் ஏலம் போகவில்லை. இப்போது இரண்டாவது முயற்சியும் பலனளிக்கவில்லை.

சனிக்கிழமை ஏலம் விடப்பட்ட பொருள்களில் கிங்பிஷர் லோகோ மற்றும் அதன் விளம்பர வாசகம் (Fly the Good Times) மற்றும் பிற டிரேட் மார்க் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய ஏலம் நடத்தப்பட்டது. இவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரிசர்வ் விலை ரூ.366.70 கோடியாகும். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கடனுக்கு ஈடாக அளிக்கப்பட்ட தொகையில் பத்தில் ஒரு பங்காகும். அதாவது வங்கிகள் கடன் அளித்த தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட இந்தத் தொகை இல்லை.

நிர்ணயிக்கப்பட்ட ரிசர்வ் விலை மிக அதிகம் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மூலமான ஏலம் காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஏலத்தில் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. இந்த ஏலத்தை எஸ்பிஐ கேப் டிரஸ்டி நிறுவனம் நடத்தியது. சர்பாசி சட்டத்தின் அடிப்படையில் இவை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிக வெற்றிகரமாக செயல்பட்டபோது இந்த லோகோவின் மதிப்பு ரூ. 4 ஆயிரம் கோடி என கிராண்ட் தார்ன்டன் நிறுவனம் மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே விமான சேவை யில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த பிராண்டை வாங்க ஆர்வம் காட்டவில்லை. புதிதாக நிறுவனம் தொடங்க உள்ள நிறுவனங்கள் இந்த பிராண்டை வாங்குவதைவிட புதிய பிராண்டை ஏற்படுத்தி அதை நடத்தலாம் என முடிவு செய்திருப்பது புரிந்ததாக வங்கியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் ரிசர்வ் விலை ரூ. 150 கோடியாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த ஏலத்திலும் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. மும்பையில் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ள வில்லே பார்லே பகுதியில் 17 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்தை எவரும் வாங்க முன் வரவில்லை.

மார்ச் மாதம் 2-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறிய கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, வங்கிகளுக்கு திருப்பித் தர வேண்டிய கடன் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி மற்றும் வட்டியும் அடங்கும். இது தவிர அந்நியச் செலாவணி மோசடி வழக்கும் அவர் மீது போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப் பட்டுள்ளது. இந்தியாவுக்கு அவரை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT