வணிகம்

பங்குச்சந்தை கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.47 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: உலகை உலுக்கி வரும் பணவீக்க விகிதம் மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவு கண்டன. இன்றைய காலைநேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.5.47 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.

கரோனா பரவலால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது.

இதுமட்டுமின்றி சீனாவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்படுவதாலும் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு இதனால் விலைவாசி பெரிய அளவில் உயரும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தைகள் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டன. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தையும் 2 சதவீதம் வரையில் சரிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து, 52,801 புள்ளிகளாக சரிவு கண்டது. பின்னர் சற்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 422 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. நிப்டி 15,799 புள்ளிகளில் வர்த்தகமானது. சற்று உயர்வு கண்டு வர்த்தகமாகி வருகிறது. பெருமளவு பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன.

சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் இன்றைய காலைநேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.5.47 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். ஆரம்ப வர்த்தகத்தில் 30-பங்குகளின் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,568.46 புள்ளிகள் குறைந்து 52,734.98 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 451.9 புள்ளிகள் சரிந்து 15,749.90 ஆக இருந்தது.

SCROLL FOR NEXT