வணிகம்

PhonePe-வை தொடர்ந்து மொபைல் ரீசார்ஜுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Paytm | பயனர்கள் தகவல்

செய்திப்பிரிவு

போன்பே செயலியை தொடர்ந்து மொபைல் ரீசார்ஜுக்கு பேடிஎம் செயலியிலும் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரதான யுபிஐ செயலிகளில் இந்த இரண்டு செயலிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் ரீசார்ஜுகளுக்கு பேடிஎம் செயலியில் ரூ.1 முதல் ரூ.6 வரையில் வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ, பேடிஎம் வாலாட் என அனைத்து வித பேமெண்ட் மோடிலும் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த ஆண்டு முதலே போன்பே செயலியில் ரீசார்ஜுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் வாக்கில் மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்பவர்களில் ஒரு சிறிய அளவிலான பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது பேடிஎம். இப்போது அதிக அளவிலான பயனர்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறதாம் பேடிஎம். இதனை பயனர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் இப்போதைக்கு 100 ரூபாய்க்கு மேலான ரீசார்ஜ் தொகைக்கு தான் கூடுதல் கட்டணத்தை பேடிஎம் வசூலித்து வருவதாக தகவல். இது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை முயற்சி என பேடிஎம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போன்பே செயலியில் 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தாலே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ரீடைலர்களுக்கான கமிஷன் தொகையை டெலிகாம் நிறுவனங்கள் குறைந்துள்ளதாக பேமெண்ட் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு கூகுள் பே மற்றும் அமேசான் பே செயலியில் மொபைல் ரீசார்ஜுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. மறுபக்கம் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்களது அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கின்றன. இப்போதைக்கு இந்த சிக்கலுக்கு இது ஒரு தீர்வாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT