இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படம்தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று வெளியான ஒரு செய்தியில் காந்தி படம் அல்லாது மாற்றாக அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படங்களும் சேர்க்கப்பட இருப்பதாக முன்னணி இணைய இதழ்களிலும் செய்தித் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், காந்தி படமும் ரூபாய் நோட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட இருப்பதாகவும் வதந்தி சமூக வலைதளங்களில் பரவி விவாதமும் ஆனது. முதலில் வெளியான அந்தச் செய்தியில் இந்திய ரூபாய் நோட்டுகளை உருவாக்கும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் ஒன்றிய அரசு நிறுவனம் அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர், காந்தி ஆகியோரின் வாட்டர் மார்க் ஓவியங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக வெளியிட்ட வெயிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை எனவும், மேலும் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களும் சேர்க்கப்பட உள்ளதாகக் கசிந்த தகவலையும் ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.