புதுடெல்லி: திட்டமிட்டப்பட்டதை விட 5 மாதங்களுக்கு முன்பாகவே 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருளின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை', வரும் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், ஊக்கமளிக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, 2014-ம் ஆண்டு முதல் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு தலையீடுகளால், 20 சதவீத எத்தனால் கலவை இலக்கு அதற்கு முன்பாகவே, 2025 - 26 –க்குள் எட்டப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனால் கலப்படத்திற்கான வழிமுறை ஜூன் 2021- ல் பிரதமரால் வெளியிடப்பட்டது. இது 20 சதவீத எத்தனால் கலவையை அடைவதற்கான விரிவான பாதையை வழங்குகிறது. நவம்பர் 2022 -க்குள் 10 சதவீத எத்தனால் கலவையை அடைய வேண்டிய இடைநிலை மைல் கல்லையும் இது குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, திட்டத்தின் கீழ் 10 சதவீத கலப்பு இலக்கானது, அதன் காலக்கெடுவான 2022 நவம்பர் என்பதை விட மிகவும் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீதத்தை எட்டியுள்ளன.
கடந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல், ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி சேமிப்பை ஏற்படுத்தியது. கார்பன் உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்து, ரூ.40,600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு விரைவாக செலுத்த வழிவகுத்தது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து முன்முயற்சிகளுடன், எத்தனால் கலப்பு திட்டம் 2025-26 க்குள் 20 சதவீதம் கலப்பு இலக்கை அடையும் பாதையில் உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.