பெங்களூரு: மொபைல் கேமிங் பிளாட்பார்மான MPL (மொபைல் ப்ரீமியர் லீக்) நிறுவனம் சுமார் 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் என தெரிகிறது.
கடந்த 2018-இல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. சுமார் 60-க்கும் மேற்பட்ட மொபைல் போன் கேம்களை இந்த தளத்தின் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து விளையாடலாம். 9 கோடி பயனர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனம். இந்தியா, இந்தோனேசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மாதிரியான பகுதிகளில் பயனர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்ச கணக்கில் தொடர்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான விவரம் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை MPL இணை நிறுவனர்கள் சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷுப் மல்ஹோத்ரா ஆகியோர் தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலமாக தெரியவந்துள்ளது. அதில் நிறுவனம் தற்போது சந்தித்து வரும் சிக்கல் குறித்தும் விவரித்துள்ளனர்.
"பாய்ந்தோடும் நதியை போன்றது சந்தை என நாங்கள் எப்போது சொல்வோம். அந்த ஓடத்தில் கீழ் நோக்கி தள்ளப்படும்போது அதை நாம் எதிர்த்து எதிர்நீச்சல் போட முடியாது" என தெரிவித்துள்ளனர் இருவரும்.
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த ஐந்து மாத காலத்தில் சுமார் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு எதுவுமின்றி இந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.