மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தினார்.
வெள்ளிக்கிழமை மின்னுற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து அவர் பேச்சு நடத்தினார். இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனர் அனில் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விநீத் மிட்டல், ஜிண்டால் பவர் நிறுவனத் தலைவர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து இவர்களுடன் விவாதித்தார். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிலக்கரியின் தரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மே மாதத்தில் பற்றாக்குறை அளவு 7 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது.
இப்போதுள்ள சூழலில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கூடுதலாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்குமாறு கோரியுள்ளோம். இதன்படி இப்பகுதியில் உள்ள சுரங்கங்களில் இப்போது நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகிறது.
இது தவிர மின்னணு டெண்டர் மூலம் (இ-டெண்டர்) நிலக்கரி ஒதுக்கீடு செய்யும் அளவைக் குறைக்க கோல் இந்தியா நிறுவனம் முயல வேண்டும் என்றார். இதன் மூலம் நிலக்கரி கூடுதலாகக் கிடைக்கும் என்றார். பியுஷ் கோயல் கூடுதல் பொறுப்பாக நிலக்கரித்துறையையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோல் இந்தியா நிறுவனம் தனது உற்பத்தியை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை அரசு மின் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் கூடுதலாக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கோயல் கூறினார்.
மின் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் சப்ளை செய்ய முடியாததால் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சுரங்கப் பணிகளுக்கு கால தாமதமாக அனுமதி அளித்ததும் முக்கிய காரணமாகும்.
பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி செய்வது அதிக செலவு பிடிக்கும் என்பதால் சிறிய நிறுவனங்கள் மின்னுற்பத்தியை நிறுத்தின.
கோல் இந்தியா நிறுவனம் தனது நிலக்கரி உற்பத்தியில் 7 சதவீதத்தை இ-டெண்டர் முறையில் ஏலம் விடுகிறது. இதில் சிறிய நிறுவனங்கள், மின் நிறுவனங்கள் அல்லாதவையும் இந்த முறையில் நிலக்கரியை வாங்குகின்றன. இந்த முறையில் வைக்கப்படும் உயர்ந்தபட்ச விலை காரணமாக மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்த முறையில் நிலக்கரி வாங்க அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியாவில் மின்னுற்பத்தி நிலையங்களில் 60 சதவீதம் நிலக்கரி மூலம் செயல்படு பவையாகும். எந்தெந்த மின்னுற்பத்தி நிலையங்களின் திட்டப்பணி முடிவடைந்து உற்பத்தி தொடங்க உள்ளதோ அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலக்கரியை சப்ளை செய்யுமாறு கோல் இந்திய நிறுவனத்தை கோயல் கேட்டுக் கொண்டார்.
நிறுவனங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும்போது அவற்றின் தரம் குறித்து ஆராய வேறொரு தனியார் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் நிலக்கரி ஏற்றுமதியாகும் இடத்திலேயே அதன் தரம் பரிசோதிக்கப்படுவதால், புகார்கள் எழுவதற்கு இடமிருக்காது என்று கூறப்பட்டது.
இந்த யோசனையை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக மூன்று மாதங்களுக்கு அரசு நிறுவன மின்னுற்பத்தி நிலையங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எந்த அளவுக்கு திருப்திகரமாக உள்ளது என்பதைப் பொறுத்து பின்னர் இதை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலக்கரி ஒதுக்கப்படும் என்று கோல் இந்தியா நிறுவன அதிகாரிகள் அமைச்சரின் கருத்துக்கு பதில் அளித்துள்ளனர். அதேசமயம் மற்றொரு நிறுவனத்தை நிலக்கரியின் தரத்தை சோதிக்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
மின்னுற்பத்தி நிறுவன தலைவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையும் இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சந்தித்து தங்களுடைய தொழில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கூறினர். இரு அமைச்சர்களும் நிறுவன தலைவர்களின் பிரச்சினைகளை கவனிப்பதாக உறுதி அளித்தனர்.
நிலக்கரி பற்றாக்குறை, சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல், வங்கிக் கடன் கிடைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை நிறுவன தலைவர்கள் நிதியமைச்சரிடம் தெரிவித்தனர்.