வணிகம்

நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி எதிர்பார்ப்பு: சிஐஐ தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீத அளவில் இருக்கும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்திருக்கிறது. சிஐஐயின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற நௌஷத் போர்ப்ஸ், முதல்முறையாக நேற்று சென்னை வந்தார். 2016-17- ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கினார். மேலும் அவர் கூறியதாவது.

நடப்பு நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிஐஐ 8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நம்புகிறோம். பருவமழை, நிதிப்பற் றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக் குறை உள்ளிட்ட பேரியல் பொருளா தார தகவல் மேம்பட்டிருப்பது, அந்நிய நேரடி முதலீடு உயர்வது, வட்டி விகிதம் குறைந்து வருவது ஆகிய காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சியை அடைய முடியும். கடந்த இரு நிதி ஆண்டுகளாக விவசாய வளர்ச்சி பெரிய அளவில் இல்லாத நிலையில் இந்த நிதி ஆண்டில் விவசாய வளர்ச்சி இருக்கும்.

அதே சமயத்தில் சில பாதகங்களும் இந்தியாவுக்கு உள்ளன. தேவை குறைவாக இருப்பது, ஏழாவது ஊதிய குழு பரிந்துரை, கச்சா எண்ணெய் உயர்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர இன்னும் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக ஜிஎஸ்டி அமல்படுத்த வேண்டும். அதற்கு அரசியல் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். அப்போதுதான் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியும்.

இந்தியாவில் தொழில் புரிவதற்கான சூழல் மேம்பட்டிருந்தாலும், நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். எளிதாக தொழில்புரிவதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி 130 இடத்தில் இருக்கிறது. ஆனால் 50 இடங்களுக்குள் வரவேண்டும் என்ற இலக்கை அடைய நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக எந்த அரசு வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். நாங்கள் ஆளுங்கட்சி மட்டுமல் லாமல் எதிர் கட்சிகளுடனும் அவ்வப்போது பேசி வருவோம் என்று போர்ப்ஸ் கூறினார்.

SCROLL FOR NEXT