சென்னை: இரு சக்கரம் மற்றும் ஆட்டோக்களைத் தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் ஐ-கியூப் ஸ்கூட்டரின் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ. தூரம் செல்லக் கூடியது. இதில் 7 அங்குல டிஎப்டி தொடுதிரை உள்ளது. வாகனத்தின் செயல்பாடுகளை எளிமையாக்க இது உதவுகிறது. புளூடூத், கிளவுட் இணைப்பு வசதி கொண்டது. இரண்டு ஹெல்மெட் மற்றும் பிற பொருள்களை வைப்பதற்கு அதிக இட வசதி ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதில் 5.1 கிலோவாட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும். இதில் டிவிஎஸ் ஐகியூப் எஸ்டி, ஐகியூப் எஸ் மற்றும் ஐ கியூப் என மூன்று வேரியன்ட்கள் வந்துள்ளன. இதில் டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் இயங்குதளம் உள்ளது. இது மேம்பட்ட நேவிகேஷன் சிஸ்டம், டெலிமேடிக்ஸ் யூனிட், வாகனத் திருட்டைத் தடுக்க உதவும் அம்சங்களை உள்ளடக்கியது. விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை. அதிகபட்சம் நான்கரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஐ-கியூப் மாடல் விலை ரூ.98,564 ஆகவும், ஐ கியூப் எஸ் மாடல் விலை ரூ.1,08,690 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஐகியூப் எஸ்டி மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.