புதுடெல்லி: மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. மும்பைப் பங்குச் சந்தையில் 1,416 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 52,792 ஆக சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையில் 430 புள்ளிகள் குறைந்து நிஃப்டி குறியீட்டு எண் 15,809 ஆக சரிந்தது. மொத்தத்தில் சென்செக்ஸ் 2.61%, நிஃப்டி குறியீட்டு எண் 2.65% அளவில் சரிந்தன. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி அளவில் நேற்று இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நீடிக்கும் சூழலில், உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. தேசியப் பங்குச் சந்தையில் விப்ரோ 6.25%, ஹெச்சிஎல் டெக் 5.99%, இன்ஃபோசிஸ் 5.44%, டெக் மஹிந்திரா 5.43% டிசிஎஸ் 5.42%, டாடா ஸ்டீல் 4.92% அளவில் சரிந்தன.