பெங்களூரு: 424 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேதாந்து. இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். முன்னதாக, சுமார் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்திருந்தது வேதாந்து.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது கல்வி சார்ந்த EduTech ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேதாந்து. கடந்த 2014-இல் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட்-அப்களில் வேதாந்துவும் ஒன்று. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் நிதி ஆதாரத்தையும் இந்நிறுவனம் திரட்டி வருகிறது. இந்நிலையில், தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
வம்சி கிருஷ்ணா கொடுத்துள்ள விளக்கம் என்ன? - "மொத்தம் உள்ள 5,900 ஊழியர்களில் 424 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 7 சதவீதமாகும். இந்த முடிவை மிகவும் கடினமான மனநிலையில் நிர்வாகம் எடுத்துள்ளது. இருந்தாலும் நிர்வாகம் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என கருதுகிறேன். இது நிறுவனத்தின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு.
இப்போதைய சூழல் மிகவும் கடினமானதாக உள்ளது. ஐரோப்பாவில் போர், வட்டி விகிதம் உயர்வு, இந்தியா மற்றும் உலக அளவில் பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலாண்டுகளுக்கான மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளார்.
வேதாந்து இந்த நடவடிக்கையை எடுக்க பிரதான காரணம், ஆன்லைன் கல்விக்கான தேவை குறைந்த காரணத்தால்தான் என சொல்லப்படுகிறது. இதேபோல இன்னும் பிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கடந்த களங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.