கொழும்பு: இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் கொழும்பு துறைமுகம் அருகே கப்பல் காத்திருக்கும் நிலையில் பழைய பாக்கித் தொகையை செலுத்த கையில் பணமில்லாமல் இலங்கை அரசு சிக்கலில் தவிக்கிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தட்டுப்பாடு
டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தேவையான அந்நியச் செலாவணியை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1, 20,000 டன்கள் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் செய்தது.
இது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவித்த நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குவதில் சிக்கல் நீடித்தது. கடந்த ஏப்ரலில் இதே பிரச்சினை எழுந்தபோது இந்தியா மீண்டும் அனுப்பி வைத்தது.
இலங்கை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவிலிருந்து மார்ச் மாதம் 28-ம் தேதி இறக்குமதி செய்கிறது. ஒவ்வொரு முறையும் இலங்கை ஏற்கெனவே பெட்ரோல் டெலிவரி செய்ததற்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும். அதாவது ஒரு தடவைக்கான தொகையை நிலுவையில் கடனாக வைத்துக் கொள்ளலாம்.
கடந்த முறை வாங்கிய தொகையை இந்தமுறை பெட்ரோல் டெலிவரி செய்யும் முன்பு ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை பெட்ரோல் டெலிவரி செய்யப்படாது என ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதன்படி கடந்த முறை பெட்ரோல் வாங்கியதற்கான 53 மில்லியன் அமெரிக்க டாலரை பணத்தை கொடுத்தால்தான் மே மாதத்திற்கான பெட்ரோல் டெலிவரி செய்யப்படும் என பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நிறுவங்கள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன.
இலங்கைக்கு பெட்ரோலை ஏற்றி வந்த கப்பல் கொழும்பு துறைமுகம் அருகே கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பு வாங்கிய பெட்ரோலுக்கான 53 மில்லியன் டாலர் தொகையை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லை. இதனால் பெட்ரோலை எடுத்து சென்ற கப்பல் பெட்ரோலுடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தை கொடுத்தால் தான் கப்பலை துறைமுகத்துக்கு கொண்டு வந்து இறக்க முடியும் என அந்நிறுவனம் சொல்லிவிட்டது. ஆனால் வாங்க பணம் இல்லாமல் அந்நாடு திண்டாடி வருகிறது.
தற்போது மீதம் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அவசர சேவை வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லை வாகனங்கள் எல்லாம் பெட்ரோல் பங்க் முன்பு வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி வாகனங்களுக்கான எரிவாயு மட்டுமின்றி சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் மண்ணெண்ணெய் வாங்க அலை மோதுகின்றனர். மண்ணெண்ணெயும் கிடைக்கவில்லை. மண்ணெண்ணெய் வாங்க பெண்கள் மற்றும் ஆண்கள் காலி கேன்களுடன் வரிசையில் நிற்கின்றனர்.மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் விறகு அடுப்பு ஒன்றே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் இல்லாததால் ரோட்டில் வாகனங்களே இல்லாமல் நெருக்கடி இல்லாமல் காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாடே பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.