வணிகம்

ஆன்லைன் கேமிங் மீதான ஜிஎஸ்டி 28% ஆக உயர்கிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு தற்போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அது 28% ஆக உயர்த்தப்படுகிறது.

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் தொடர்பாக 400 நிறுவனங்கள் உள்ளன. 45,000 பேர் இத்துறை சார்ந்து வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இத்துறையின் மதிப்பு 220 கோடி டாலராக உள்ளது. ஆன்லைன் கேமிங் துறைக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்படுவதால், இத்துறை மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட், போக்கர், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகள் தற்போது பிரபலமாக உள்ளன. இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளில் பலர் பந்தயம் கட்டி பணத்தை இழக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்கொலை வரையிலும் அது செல்கிறது. இத்தகைய ஆன்லைன் பந்தய விளையாட்டுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அரசியல் தரப்புகள் கூறிவந்தன. இந்நிலையில், ஆன்லைன் கேமிங் உட்பட சில விளையாட்டுகளுக்கு 28 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயரும் போது, அவற்றில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT