வணிகம்

கனிமொழி தலைமையிலான எம்பி.க்கள் குழு மத்திய அமைச்சர்களுடன் இன்று சந்திப்பு: பருத்தி நூல் விலை உயர்வைத் தடுக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பருத்தி நூல் விலை உயர்வைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சர்களை கனிமொழி தலைமையில், மேற்கு மாவட்ட எம்பிக்கள் இன்று சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

வரலாறு காணாத விலை உயர்வு

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், தமிழகத்தில் ஜவுளித் தொழிலும், அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாகத் தடுக்கவும், நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும் 3 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதி யிருந்தார்.

மேலும், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவர்களின் போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது. எனவே, பருத்தி நூல் விலை உயர்வைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியும் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

முதல்வர் அறிவுறுத்தல்

இந்நிலையில், ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை மனதில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் இன்று நேரில் சந்தித்து, நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த உள்ளனர்.

SCROLL FOR NEXT