கோவை: உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘மை ப்ரொடக்ஷன்’ (MY Protection) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியவின் சார்பில் பங்கேற்கும் நான்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு மத்தியில் அமைந்துள்ள டாவோஸ் (Davos) நகரில் மே 22 முதல் 26 -ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடப்பு ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெருந்தொற்று நோய் மீட்பு நடவடிக்கை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வழிகள், வேலைக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல் உள்பட சில தலைப்புகளின் கீழ் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் இந்தியா சார்பில் ‘மை ப்ரொடக்ஷன்’ நிறுவனம் பங்கேற்கிறது.
இந்த நிகழ்ச்சியில், 2021ம் ஆண்டு ஐ.நா காலநிலை மாநாட்டில் விவாதிக்கப்பட்ட SDGS இலக்கான கார்பன்-நியூட்ரலின் எதிர்காலம், கட்டுப்பாடற்ற சுதந்திர உலகிற்காக தங்களிடம் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு தீர்வு வழிகளை முன்வைத்து பேச உள்ளதாக ‘மை ப்ரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ல் ‘மை ப்ரொடக்ஷன்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதனை கவின் குமார் கந்தசாமி மற்றும் ராஜா பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது உலகின் முதல் "சேஃப்டி லைஃப் ஸ்டைலு"க்கான பிராண்ட் என சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தொழில் நகரமான கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.