ஊழல் மூலம் சேர்த்த பணத்துக்கு பாதுகாப்பு கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டில் சட்ட விரோதமாக பதுக்கிய கருப்பு பணம் குறித்து வருமான வரித்துறையில் தாமாக முன்வந்து தெரிவித்தால் அதற்கு 45 சதவீத வரி, மற்றும் அபராதம் விதிக்கப்படும். சுய வருமான அறிவிப்பு வசதி ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பின் கீழ் ஊழல் மூலம் சேர்த்த பணத்துக்கு பாதுகாப்பு கிடைக்காது என்று ஜேட்லி நேற்று தெளிவுபடுத்தியுள்ளார்.
வருமான வரி தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு நிதியமைச்சம் அளித்து வரும் பதிலில் அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது.
கருப்பு பணத்தை தாமாக முன் வந்து தெரிவிக்க நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை வருமான வரித்துறையில் தகவல்களை தாமாக முன்வந்து தெரிவித்தால் வருமான வரி, அபராதம் என 45 சதவீதம் வரி செலுத்தினால் போதும். இவர்கள் மீது வருமானவரி சட்டம் அல்லது சொத்து வரி சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
இப்படி கருப்பு பணத்தை முன் வந்து தெரிவிப்போர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் இனிவரும் காலங்களில் சொத்துக்களை விற்கும்போது கிடைக்கும் ஆதாயத்துக்கும் வரி செலுத்த வேண்டும் என்றார்
தாமாக முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் ஊழலின் சேர்த்த பணத்தை தெரிவிக்கலாமா என்கிற மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், இந்த திட்டம் கருப்பு பணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் கீழ் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய வகையில் சேர்க்கப்பட்ட பணத்தை இதன் மூலம் பாதுகாக்க முடியாது. அதாவது இந்த திட்டம் கருப்பு பணத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தாமாக முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை அளித்துள்ள சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்று நிதியமைச்சம் தெளிவு படுத்தியுள்ளது. உள்நாட்டில் கணக் கில் காட்டப்படாத வருமானம் மற்றும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகளை வைத் துள்ளவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.