வணிகம்

பாதுகாப்பான சாலைப் பயணம்: நானோ காரை அறிமுகம் செய்தது ஏன்? - ரத்தன் டாடா விளக்கம்

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியக் குடும்பங்கள் பாதுகாப்பான சாலைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்ததாக தெரிவித்துள்ளார் ரத்தன் டாடா.

உலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனமாக உள்ளது டாடா நிறுவனம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. பேஸஞ்சர் கார், சரக்கு வாகனம் என வெவ்வேறு பிரிவுகளில் வாகனங்களை தயாரித்து வருகிறது டாடா. இப்போது மின்சார வாகன தயாரிப்பில் அதன் கவனம் திரும்பி உள்ளது. இந்நிலையில், டாடா நானோ காரை சந்தையில் அறிமுகம் செய்ய என்ன காரணம்? என்பதை தெரிவித்துள்ளார் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.

"இந்தியக் குடும்பங்கள் சாலையில் ஸ்கூட்டர்களில் பயணிப்பதை நான் பார்த்துள்ளேன். அந்த பயணத்தின் போது தாய் மற்றும் தந்தைக்கு மத்தியில் சாண்ட்விட்ச் போல குழந்தைகள் அடைப்பட்டு இருப்பார்கள். அவர்களது பாதுகாப்பான பயணித்திற்காக என்ன செய்யலாம் என யோசித்து போது உதயமான ஐடியா தான் நானோ.

நான் ஆர்க்கிடெக்ட் படித்ததன் பலனாக டூடுல் வரைவேன். நான் ஓய்வாக இருக்கும் போது அதை வரைவது வழக்கம். இருசக்கர வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். அப்படி நான் வரைந்த டூடுல் நான்கு சக்கரங்களை கொண்டிருந்தது. அப்போது முடிவு செய்தேன் அந்த பாதுகாப்பான் வாகனம் கார் தான் என்று. நானோ, நம் மக்கள் அனைவருக்குமான கார்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

இருந்தாலும் சந்தையில் மலிவு விலை கார்களுக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் விற்பனையில் பின்தங்கியது டாடா நானோ. சென்டிமென்ட் காரணமாக இந்த காரின் உற்பத்தியை நிறுத்த முடியாது என டாடா தெரிவித்தது. கடந்த 2018-இல் இதன் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டதாக தகவல்.

SCROLL FOR NEXT