புதுடெல்லி: எல்ஐசி-யின் பொதுப்பங்கு விற்பனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் 8 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை பொதுப்பங்காக வெளியிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய பொதுப்பங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
எல்ஐசி-யின் பங்குகளை வாங்க நாடு முழுவதும் 47.83 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.60 வரையும், சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ரூ.40 வரையும் தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது, பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட எல்ஐசி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக எல்ஐசி சட்டம் -1956 (திருத்தச் சட்டம் 2011) மற்றும் நிதிச்சட்டம் 2021 ஆகியவற்றில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்ட திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தன.
அதையடுத்து எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு தடை விதிக்கக்கோரியும், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை செல்லாது என அறிவிக்கக் கோரியும் நாகர்கோவிலைச் சேர்ந்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சி்ங் உள்ளிட்ட பலர் ஆஜராகி, எல்ஐசியின் இந்த பொதுப்பங்கு வெளியீட்டு விற்பனை, பாலிசிதாரர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக எல்ஐசி-க்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். பாலிசிதாரர்களுக்கு மட்டும் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 919 கோடி இழப்பு ஏற்படும்.
எனவே எல்ஐசி சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 4, 5, 24 மற்றும் நிதிச்சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 130, 131, 134 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லாது என்றும், அவை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும். அத்துடன் இந்த பொதுப்பங்கு வெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, எல்ஐசியின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கும், பங்குகள் விற்பனைக்கும் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கு நிதி மசோதா சட்டத்துடன் தொடர்புடையது என்பதால் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் வகையில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும், இதுதொடர்பாக மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் 8 வாரங்களில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.