புனே: முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரியில் இயங்கும் பயணிகள் பஸ்ஸை இகேஏ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பஸ்ஸை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டார்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் வகையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, புகையை வெளியிடாத புதிய பஸ் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த பஸ்ஸை பார்வையிட்ட பிறகு நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார்.
வாகனத்தின் செயல்பாடுகளை இகேஏ மற்றும் பினாக்கிள் நிறுவனத்தின் தலைவர் சுதிர் மேத்தா விளக்கினார்.
விலை குறைவு
பினாக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இகேஏ செயல்படுகிறது. இந்நிறுவனம் இ9 என்ற பெயரில் முதலாவது பேட்டரி பஸ்ஸை உருவாக்கியுள்ளது. இது மோனோகார்க் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பஸ், வழக்கமாக டீசலில் இயங்கும் பஸ்ஸின் விலையை விட குறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்ஸின் முன்புறம் மற்றும் பின்புறம் ஏர் சஸ்பென்ஷன் வசதி உள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 200 கிலோவாட் (272 பிஎஸ்) திறன் கொண்டது. இது 2,500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பஸ்ஸினுள் ஏறி, இறங்கும் வகையில் சாய்தளமாக படிக்கட்டு உள்ளது. இதனால் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள் எளிதில் இதில் பயணிக்க முடியும். 2,500 மி.மீ. அகலம் கொண்ட பஸ்ஸில் 31 பேர் பயணிக்கலாம்.
வாகன கட்டுப்பாடு முழுவதற்குமான சாஃப்ட்வேரை இந்நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வசதி கொண்டது. மிகச் சிறப்பான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, இதைப் பயன்படுத்துவோருக்கு உரிய பலனை (வாகன விலைக்கேற்ற) அளிக்கும் என்று சுதிர் மேத்தா தெரிவித்தார்.