வணிகம்

பனியன், உள்ளாடைகளின் விலை 15% உயர்வு: திருப்பூர் சைமா கூட்டத்தில் முடிவு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக, பனியன், உள்ளாடைகளின் விலை 15% உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான நூல் விலையின் அபரிமிதமான உயர்வு, உப தொழில்கள், தொழிலாளியின் கூலி, கட்டண உயர்வு குறித்து மகாசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன்படி பனியன், உள்ளாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தி நிர்ணயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், நிலைமையை சமாளிக்கும் வகையில் இந்த புதிய விலை கடந்த 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT