மும்பை: பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்துவதாகவும் இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடித்து வந்தது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடித்து வந்தது.
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வட்டியை வங்கிகளிடம் பெறுகிறது. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டில் நடந்த10-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தில் வட்டி வீதம் மாற்றப்படவில்லை. குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாக நீடிக்கும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்திய பொருளாதாரம் பணவீக்கத்தின் தாக்கத்தின் காரணமாக ஏற்கெனவே அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் பணவீக்கம் 3 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்தநிலையில் அறிவிக்கப்படாத நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் கூட்டம் இன்று திடீரென நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 புள்ளிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி ரெப்போ விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 4.40 சதவீதமாக உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.