சென்னை: அட்சய திருதியை நாளான இன்று தங்க நகைக் கடைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கம் வாங்கிச் செல்கின்றனர். தங்கம் விலையும் நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்று குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அக்சய திருதியை நாள் என்பதால் தங்கம் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை உட்பட பல நகரங்களிலும் தங்க நகை கடைகளில் ஏராளமானோர் வந்து நகைகள் வாங்கிச் செல்கின்றனர். அக்சய திருதியை நாளில் மக்களை ஈர்க்க நகைகடைகள் பல சலுகைகளையும் அறிவித்துள்ளன.
சென்னையில் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,816-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,528-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,720-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000 ஆக உள்ளது.