வணிகம்

ஏப்ரலில் மட்டும் 19,019 கார்களை விற்பனை: கியா இந்தியா புதிய உச்சம்

செய்திப்பிரிவு

புது டெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 19,019 கார்களை விற்பனை செய்துள்ளது கியா நிறுவனம். இந்தத் தகவலை கியா இந்தியா நிறுவனமே தெரிவித்துள்ளது.

கரோனா பரவலுக்குப் பிறகு விநியோக சிக்கல் காரணமாக உலகளவில் கார்களின் உற்பத்தி செலவு கூடியுள்ளது. செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி பணிகளும் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக கார்களின் விலையை பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 19,019 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது கியா நிறுவனம். இதன் மூலம் இந்தியாவில் கியாவின் சந்தை வாய்ப்புக்கான சதவீதமும் கூடியுள்ளது.

செல்டோஸ் 7,506 கார்கள், சோனட் 5,404 கார்கள், கேரன்ஸ் 5,754 கார்கள், கார்னிவல் 355 கார்கள் என மொத்தம் 19,019 கார்கள் கடந்த ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

"கியா நிறுவன கார்களுக்கு அதிக தேவை இருந்து வருகிறது. மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியாக எங்களது உற்பத்தியை அதிகரித்து வருகிறோம். EV6 வாகனத்தின் மூலம் இந்தியாவில் மின்சார வாகன சந்தையிலும் என்ட்ரி கொடுக்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார் கியா இந்தியாவின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் ஹர்தீப் சிங் பிரார். வரும் 26-ஆம் தேதி முதல் EV6 வாகனத்திற்கான முன்பதிவு ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT