வணிகம்

எல்ஐசி பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பொதுப் பங்கு மே 4-ம் தேதி வெளியாகிறது. மே 9-ம் வரை பங்குகளில் முதலீடு செய்யலாம். இதற்கான விலை ரூ. 902 முதல் ரூ. 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலிசிதாரர்களுக்கு ரூ.60 விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ரூ.45 விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் அரசு 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசியின் நிகர மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும்.

பெரு மூலதன நிறுவனங்கள் மே 2 முதல் முதலீடு செய்ய முடியும். தற்போதைய சூழலில் மிகப் பெருமளவு நிதி திரட்டும் நிறுவனமாக எல்ஐசி விளங்கும்.

அரசு 5 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் ரூ. 31.6 ஆயிரம் கோடியை திரட்ட முன்னர் திட்டமிட்டிருந்தது. கடந்த வாரம் பங்கு விலக்கல் அளவை 3.5 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தது. ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் காரணமாக பங்குச் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

பொதுவாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பங்கு விலக்கல் மேற்கொண்டால் 5 சதவீத அளவுக்கு பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். ஆனால் இதுதொடர்பாக பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) அரசு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எல்ஐசி சொத்துகளை மில்லிமேன் அட்வைஸர்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. 2021, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி ரூ.5.4 லட்சம் கோடி என மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி பங்குச் சந்தை மதிப்பு மதிப்பீடு தொகையை விட 1.1 மடங்கு அதிகமாக ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும்.

SCROLL FOR NEXT