வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உலக வர்த்தக நிறுவன (டபிள்யூடிஓ) இயக்குநர் ஜெனரல் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல நாடுகளில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு டபிள்யூடிஓ விதிமுறைகள் தடையாக உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாக அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஆகியவற்றின் குளிர்கால கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஐஎம்எப் கூட்டத்தில் டபிள்யூடிஓ இயக்குநர் ஜெனரல் நகோஸி ஒகோன்ஜோ இவேலா கூறியதாவது:
உணவுப்பொருள் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளுக்கு சுமுகத் தீர்வு காணப்படும். போர்காரணமாக இந்தியா இப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம் உலக அளவில் போர்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது பெரும் பிரச்சினையாகும். போர் காரணமாக உணவு தானிய ஏற்றுமதி குறிப்பாக கோதுமை ஏற்றுமதி அதிகரிப்பது ஒரு சில நாடுகளுக்கு கிடைத்த வாய்ப்பு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
20 நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி
இந்தியா தற்போது 20 நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டு 1.5 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியாவில் தானிய உற்பத்தி உபரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 11.10 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் வாஷிங்டன் சென்றிருந்த மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உலகின் பிற நாடுகளில் உணவுதானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்திய தயாரிப்புகளுக்கு உரிய சந்தையை இந்தியா அடையாளம் காண வேண்டியுள்ளது. அதேபோல தேவையுள்ள நாடுகளுக்கு உதவி புரிய வேண்டிய அவசியமும் உள்ளது.
குறிப்பாக பசியால் வாடும்நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்புவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அவ்விதம் அனுப்புவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.