மோசடி திட்டங்கள் மூலம் பொது மக்களிடம் பணம் திரட்டி ஏமாற் றும் நிதி நிறுவனங்களை முற்றிலு மாக ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் கோடிக் கணக்கான அப்பாவி முதலீட்டாளர் களைக் காக்க முடியும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
மரம் வளர்ப்புத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட நூதனமான திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மக்களை ஏமாற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியம் என அரசு கருதுகிறது.
இது போன்ற மோசடி திட்டம் மூலம் நிதி திரட்டிய சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் 2014-ம் ஆண்டிலிருந்து சிறையில் உள்ளார். இவரிடமிருந்து பணத்தை வசூலித்து முதலீட்டாளர் களிடம் திரும்ப அளிக்கும் நடவடிக்கையை நீதிமன்றம் தீவிரமாக எடுத்து வருகிறது. முறையற்ற திட்டங்கள் திரட்டிய 540 கோடி டாலர் (சுமார் ரூ. 35 ஆயிரம் கோடி) தொகையை முதலீட்டாளர்களிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில் சஹாரா குழுமம் போன்ற எந்த ஒரு நிறுவனமும் பொதுமக்களிடம் நிதி திரட்டக் கூடாது. அதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக நாடாளுமன்ற நிலைக் குழு (நிதி) உறுப்பினரும் பாஜக மக்களவை உறுப்பினருமான நிஷிகாந்த் துபே குறிப்பிட்டார்.
ஏமாற்று மோசடி திட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதுக்குமான ஒருங்கிணைந்த விதிமுறை தற்போது நடை முறையில் இல்லை.
இதை சாதகமாக வைத்துக் கொண்டே ஏமாற்றுவோர் புதிய திட்டங்களை உருவாக்கி பணம் திரட்டுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டு வர நாடாளுமன்ற குழு ஆராய்ந்து வருகிறது.
ஏற்கெனவே 6 கோடி முதலீட் டாளர்கள் ஏமாந்த 10,000 கோடி டாலர் (சுமார் ரூ. 6.60 லட்சம் கோடி) தொகை குறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
மோசடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு மாநில அரசுகளிடம் கடுமையான சட்டங் கள் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாகும். பல சமயங்களில் செபி- வசம் கடுமையான சட்ட திட்டங்கள் இல்லாததும் முக்கியக் காரணமாகும் என்று முதலீட்டாளர் குறைதீர் அமைப்பின் தலைவர் கிரீட் சோமையா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் செபி அமைப்பு 237 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு அவற்றிடமிருந்து பணத்தை வசூலித்து முதலீட்டாளர்களுக்குத் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிறுவனங்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியாவிட் டால், அவற்றின் சொத்துகளை விற்று பணத்தை முதலீட்டாளர் களுக்கு அளிக்குமாறு கூறப்பட் டுள்ளது.
புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சி களும் ஆதரவு அளிக்கும் என அரசு நம்புகிறது. இருப்பினும் சில கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள், இதனால் வேலையிழப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் உள்ளது போன்று முதலீட்டாளர் நலன் காக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கிறது.
இந்த மசோதா அமலுக்கு வந்தால் 1,400 கூட்டுறவு அமைப் புகள் தடை செய்யப்படும். இத் தகைய அமைப்புகள் 30,000 கோடி டாலர் வரை முதலீடு திரட்டியுள்ளன. இதுவும் பாதிக்கப் படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.