கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு செய்ததான வழக்கில் சொத்துகளை முடக்குவதற்கு எதிராக சூப்பர் மேக்ஸ் பெர்சனல் கேர் நிறுவனம் செய்திருந்த கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
பிளேடுகள், ரேசர்கள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கும் சூப்பர் மேக்ஸ் நிறுவனம் தர வேண்டிய வரிபாக்கித் தொகையை வசூல் செய்ய அவரது அசையும், அசையாச் சொத்துகளை முடக்கி கடந்த மார்ச் 28-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சூப்பர்மேக்ஸ் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
அந்த மனுவில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க அனுமதி வழங்காமலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது இயற்கை நீதிக்குப் புறம்பானது, சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சங்க்லேச்சா மற்றும் ஏ.கே.மேனன் அடங்கிய அமர்வுக்கு இன்று வந்த போது வருமான வரித்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சரஞ்ஜித் சந்தர்பால் மற்றும் சூப்பர் மேக்ஸ் நிறுவன வழக்கறிஞர் ஜே.டி.மிஸ்ட்ரி ஆகியோரது வாதங்களைக் கேட்டனர்.
பிறகு சொத்துகளை வரிவசூலுக்காக பயன்படுத்தும் முடிவை 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்குமாறு கூறியதோடு, நிறுவனத்தின் மேல்முறையீடு குறித்து வருமான வரித்துறையின் உயரதிகாரி முடிவேடுக்கும் வரை வருமான வரித்துறை தங்களது உத்தரவின் மீது செயல்பட வேண்டாம் என்று கூறினர்.
மேலும், சூப்பர்மேக்ஸ் நிறுவனம் சார்பாக வரிவசூலுக்காக அட்டாச் செய்யப்படும் சொத்துகளை அந்நிறுவனம் விற்கவோ, அல்லது அன்னியப்படுத்தவோ கூடாது என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் மீது 3 வாரங்களுக்குள் முடிவெடுக்கவும் கோர்ட் உத்தரவிட்டது.
வருமான வரித்துறையின் வாதங்களின் படி சூப்பர்மேக்ஸ் நிறுவனம் ஆர்சிசி சேல்ஸ் மற்றும் வித்யூத் மெடாலிக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை வாங்கியுள்ளது, பிறகு தனது சொத்துகளை 6 நாடுகளில் உள்ள 6 நிறுவனங்கள் மூலம் அயல்நாட்டுக்கு மாற்றியுள்ளது. இது வரி ஏய்ப்புக்காகச் செய்யப்பட்டதே.
அயல்நாட்டுக்கு மாற்றப்பட்ட இந்தச் சொத்துக்களினால் பயனடைந்த நிறுவனம் சூப்பர்மேக்ஸ். இதன் மூலம் ரூ.1,737 கோடி நிகர வருமான வரியை சூப்பர்மேக்ஸ் செலுத்த வேண்டியுள்ளது என்று வருமானவரித்துறை தனது மனுவில் கூறியுள்ளது.