சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 2021-22-ம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. இது முந்தையக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகும்.
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவன பங்குதாரர்களின் வருடாந்திரப் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து மலபார் குழுமத் தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது:
2021-22-ம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி வர்த்தகம எதிர்பார்க்கிறோம். நுகர்வோரின் ரசனைக்கு ஏற்ற தயாரிப்புகள், உலக அளவில் புதிய ஷோரூம்கள் திறப்பு, ‘ஒரே இந்தியா ஒரே விலையில் தங்கம்’ திட்டம் மற்றும் ‘நியாயமான விலைக் கொள்கை’ ஆகியவை இணைந்து இந்த குறிப்பிடத்தக்க இலக்கை அடைய உதவின.
கடந்த ஆண்டில் 31 புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. 2022 ஜனவரியில் மட்டும் 22 ஷோரூம்களைத் திறந்துள்ளோம். வர்த்தக இலக்கை எட்டும் வகையில் இந்தியாவில் 60 ஷோரூம்கள் உட்பட மொத்தம் 97 ஷோரூம்களைத் திறக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தற்போது 10 நாடுகளில் 276 கிளைகள் உள்ளன. மேலும் 5 நாடுகளில் 14 ஆபரணங்கள் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. 2021-22-ம் ஆண்டில் நிறுவனம் சார்பில் இந்தியாவில் மட்டும் ரூ.520 கோடி வரி செலுத்தியுள்ளோம்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நகை வடிவமைப்பு செய்வதால், இந்த அரிய சாதனையைக் கடினமான ஆண்டிலும் செய்ய முடிந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் இருக்கும் அனைத்து சந்தைகளிலும் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை மட்டுமே விற்று வருகிறோம். ‘மேக் இன் இந்தியா, மார்கெட் டு தி வேர்ல்ட்’ என்ற கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும் வரி இணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை எங்கள் வணிக மாதிரியின் தனிச்சிறப்பு ஆகும். இவ்வாறு அகமது கூறினார்.