சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பல்வேறு சர்வதேச காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.5,050-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.40,400-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43,592-க்கு விற்பனையாகிறது. இதுபோலவே வெள்ளியின் விலை 80 பைசா உயர்ந்து ரூ.75.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,000 ஆக உள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதற்கு சர்வதேச காரணிகள் முக்கியமாக கூறப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து இருப்பதால் உலக அளவில் பொருளாதார அச்சம் அதிகரித்துள்ளது. டாலரின் மதிப்பில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்ப்பு இருப்பதால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கையிருப்பாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவை அதிகரித்து வருகின்றன.
அடுத்ததாக ரஷ்ய- உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நிலக்கரி விலையும் உயர்கிறது. இதன் தாக்கத்தால் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் தங்கம் விலை உயர்கிறது. நாடுகளும், முக்கிய முதலீட்டு நிறுவனங்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதால் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து மெட்ராஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ''தமிழகத்திலும் தங்கம் விலை உயர்வதற்கு சர்வதேச காரணங்களே முக்கியமானது. ரஷ்ய -உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மிக முக்கிய காரணம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும்.
நம் நாட்டிலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. திருமண சீசன் மற்றும் அக்ஷய திருதியை காலம் என்பதால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கும் இந்த நிலை தொடரவே வாய்ப்புண்டு'' என்றார்.