எலான் மஸ்க் (கோப்புப்படம்) 
வணிகம்

'இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் எனப் பெயரிடுங்கள்' - எலான் மஸ்கிற்கு ஸ்னாப்டீல் சிஇஓ அறிவுரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தீவு தேசமான இலங்கையை வாங்கி அதற்கு ‘சிலோன் மஸ்க்’ எனப் பெயர் சூட்டி விடுங்கள் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கிற்கு ட்விட்டர் மூலம் வேடிக்கையாக அறிவுரை சொல்லியுள்ளார் ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால்.

அண்மையில் சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை வாங்க தயார் என சொல்லியிருந்தார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 54.20 டாலர் வீதம் வாங்க முன் வந்திருந்தார் மஸ்க். ஏப்ரல் தொடக்கத்தில் ட்விட்டரின் 9.2 சதவீதப் பங்குகளை அவர் வாங்கியிருந்தார்.

அதற்கு முன்னதாக ட்விட்டரில் பயனர்களுக்கு கிடைக்கும் பேச்சு சுதந்திரம் குறித்தும் பேசி இருந்தார் மஸ்க். அது தொடர்பாக ட்விட்டரில் கருத்துக் கணிப்பும் நடத்தியிருந்தார். தொடர்ந்து ட்விட்டரில் ‘எடிட் பட்டன்’ தேவையை குறித்தும் மஸ்க் பேசியிருந்தார். இந்நிலையில், ட்விட்டரை அப்படியே மொத்தமாக விலைக்கு வாங்க அவர் முன்வந்தார்.

இத்தகைய சூழலில்தான் இந்தியாவின் இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன் வந்த மஸ்கின் 'ஆஃபரை' இலங்கை நெருக்கடியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதனை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் அவர்.

“ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் சொன்ன விலை 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையின் கடன் தொகை 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அவர் இலங்கையை வாங்கி அதற்கு சிலோன் மஸ்க் என பெயரிட்டு அழைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் குனால்.

SCROLL FOR NEXT