வணிகம்

பங்குச் சந்தையில் ஏற்றம்: 3 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு

செய்திப்பிரிவு

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. அதனால் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது. வழக்கமான அளவை விட பருவமழை அதிகம் பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு, பணவீக்கம் குறைந்திருப்பதினால் வட்டி விகிதம் மேலும் குறையும் என்ற நம்பிக்கை ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது.

சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயர்ந்து 25626 புள்ளியிலும், நிப்டி 141 புள்ளிகள் உயர்ந்து 7850 புள்ளியிலும் முடிவடைந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டின் குறைந்தபட்ச புள்ளியில் இருந்து நிப்டி 1000 புள்ளிகளுக்கு மேலேயும், சென்செக்ஸ் 3100 புள்ளிகளுக்கு மேலேயும் உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி 29-ம் தேதி குறைந்தபட்ச புள்ளியை பங்குச்சந்தை தொட்டன. சென்செக்ஸ் 22494 புள்ளியையும் நிப்டி 6825 புள்ளியையும் தொட்டன.

அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. அதிகபட்சமாக ஆட்டோ துறை குறியீடு 3.59 சதவீதம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து வங்கி, உலோகம் மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறை குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, பிஹெச்இஎல், மாருதி ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தன. இன்போசிஸ் மற்றும் அதானி ஆகிய பங்குகள் சிறிதளவு சரிந்தன.

செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 307 கோடி ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். அதேபோல நாளை ராமநவமி என்பதாலும் பங்குச்சந்தைகள் செயல்படாது.

பங்குச் சந்தை உயர்வால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு நேற்று மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் உயர்ந்தது. தற்போது பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 96.92 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

SCROLL FOR NEXT