மும்பை: கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 1,03,546 ஊழியர்களை பணியமர்த்தி சாதனை படைத்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். அந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் 35,209 ஊழியர்கள் பணியமர்த்தி உள்ளது தெரியவருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்று, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்). மொத்தம் 5,92,195 பேர் ஊழியர்களாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தகவல். கடந்த நிதியாண்டில் வேலைக்காக சேர்க்கப்பட்ட 1,03,546 ஊழியர்களில் சுமார் 78,000 பேர் புதியவர்கள் (ஃபிரெஷர்ஸ்) என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டான 2020-21 உடன் ஓப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 40,000 என்ற அளவில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் வேலை செய்ய விரும்பும் நம்பர் 1 நிறுவனமாக டிசிஎஸ் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இது இருப்பதாக கூறுகிறார், அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி மிலிந்த். அதேநேரத்தில் கடந்த நிதியாண்டில் கடைசி காலாண்டில் நிகர லாபமாக சுமார் 9,959 கோடி ரூபாயை டிசிஎஸ் ஈட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21 நிதியாண்டின் கடைசி காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 9,282 கோடி ரூபாயாக இருந்துள்ளது. முழு ஆண்டுக்குமான நிகர லாபமாக 38,449 கோடி ரூபாய் உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று பங்குச் சந்தை நிறைவின் போது டிசிஎஸ் நிறுவன பங்கின் விலை 3,696.40 ரூபாயாக இருந்தது.