மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீடியோகான் நிறுவனம் சாட்டிலைட் ஏசி-யை இந்த கோடைக் காலத்துக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு டன் மற்றும் ஒன்றரை டன் அளவுகளில் ஸ்பிளிட் ஏசியாக இது விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு ஆர்யபோட் என பெயர் சூட்டியுள்ளது வீடியோகான்.
ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இந்த ஏசியை செயல்படுத்தலாம். ஏசி-யில் இது புதிய தொழில்நுட்பமாகும். இன்டர்நெட் மூலமான செயல்பாட்டில் இயங்குவதால் இதை சாட்டிலைட் ஏசி என குறிப்பிடுகிறது வீடியோகான். வாடிக்கையாளரின் மொபைல் ஜிபிஎஸ் பொசிஷன் மூலம் இந்த ஏசியை அணைக்கவோ அல்லது இயக்கவோ முடியும். வீட்டிலிருந்து வெளியேறினாலும், வீட்டிற்குள் நுழையும்போதும் இதை தேவைக்கேற்ப செயல்படுத்த முடியும். குறிப்பிட்ட தூரத்திலிருந்து இதை செயல்படுத்தும் வகையில் ஜியோ-பென்ஸ் எனப்படும் பாதுகாப்பு அம்சம் கொண்டது.
பாதுகாப்பு சிறப்பம்சங்களுக் காக இதில் வெப் கேமிரா தொடர்பு வசதியும் உள்ளது. இந்த வெப் கேமிரா மூலம் எடுக்கப்படும் படங்களை ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.
ஏசி-யில் உள்ள பொத்தான் எதையும் தொடாமலேயே ஒருவரது குரல் வழி செயல்படும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி-யை ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் ஐஓஎஸ் தளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சுகள் மூலம் அதற்குரிய செயலியின் மூலம் இயக்கலாம். ஒரு டன் ரூ. 34 ஆயிரம் விலையிலும் 1.5 டன் ஏசி ரூ. 39 ஆயிரம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.